புத்துயிர் பெறும் சித்தன்னவாசல் சுற்றுலா தலம்


புத்துயிர் பெறும் சித்தன்னவாசல் சுற்றுலா தலம்
x

தமிழக அரசு சார்பில் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் சித்தன்னவாசல் சுற்றுலா தலம் புத்துயிர் பெறுகிறது. இதனை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர்.

புதுக்கோட்டை

சித்தன்னவாசல் சுற்றுலா தலம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் சுற்றுலா தலம் உள்ளது. இங்குள்ள குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்கள் மிக புகழ் பெற்றவை ஆகும். குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களைப் போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 முதல் 1200 ஆண்டுகள் பழமையானவை. இந்த குகைகளும், குகை ஓவியங்களும் கி.பி. 1990-களில் நிறம் மங்க தொடங்கியதால் செயற்கையாக வர்ணம் போன்ற பொருட்களைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டது.

வரவேற்பு

சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுகையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவரைகளும் காணப்படுகின்றன. இதன் அருகில் உள்ள ஏலடிப்பட்டத்தில் சமணர்களின் படுகைகளும், தமிழ் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அங்கு சமண கோவில் ஒன்றும் உள்ளது. இதுமட்டுமின்றி படகுகுளம், இசைநீரூற்று, சிறுவர் பூங்கா உள்ளிட்டவையும் உள்ளது.

இந்தநிலையில் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று 'தினத்தந்தி' நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் சுற்றுலா கலை பண்பாட்டுத்துறை மானிய கோரிக்கையின் போது சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த ரூ.4 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

நிதி ஒதுக்கீடு மகிழ்ச்சி

அன்னவாசல் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி:- சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை இங்கேயே பொழுதை கழிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் உள்ளே கிடைக்கவில்லை. கொண்டுவந்து சாப்பிடுவதற்கு உணவு அறையும் இல்லை. மற்ற இடங்களில் அமர்ந்து சாப்பிடும் போது குரங்குகள் உணவுகளை பிடுங்கி சென்று விடுகின்றன. உணவு சாப்பிடுவதற்கு தனி அறை அமைக்க வேண்டும். படகு குளத்தில் போதுமான படகுகள் இல்லை. 2 படகுகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் பல மணிநேரம் காத்து கிடக்கின்றனர். உடைந்து கிடைக்கும் படகுக்கு பதிலாக புதிய படகுகளை இயக்க வேண்டும். பல வருடங்களாக செயல்படாமல் கிடக்கும் இசை நீரூற்றை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட மன்றத்தில் சித்தன்னவாசலை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வரவேற்பு

அன்னவாசலை சேர்ந்த பகுருதீன்:- சித்தன்னவாசலை மேம்படுத்த ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டதை வரவேற்கிறேன். சுற்றுலா தலத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் சரி செய்ய வேண்டும். கல்லூரி மாணவ-மாணவிகள் என்ற போர்வையில் சித்தன்னவாசலுக்கு வந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புத்துயிர் பெறும்

அன்னவாசலை சேர்ந்த முருகேசன்:- சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. எவ்வளவு வருமானங்கள் வந்தாலும் அதனை செலவு செய்வதற்கு இதுநாள் வரை நிர்வாகம் முன் வரவில்லை. இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு உண்டான பொருட்கள் எல்லாம் உடைந்து கிடக்கிறது. இதனால் சிறுவர்கள் விளையாட முடியவில்லை. இன்னும் பல்வேறு விளையாட்டு பொருட்களை கூடுதலாக சேர்க்க வேண்டும். தற்போது அரசு ரூ.4 கோடி ஒதுக்கியுள்ளதால் சித்தன்னவாசல் புத்துயிர் பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story