தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,562 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். அவை அதிகபட்சமாக ரூ.758-க்கும், குறைந்தபட்சமாக ரூ.508-க்கும்,சராசரியாக ரூ.677.71-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.10 லட்சத்து 59 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு வர்த்தகம் நடந்தது.
இந்தநிலையில் நேற்று 758 கிலோ பட்டுக்கூடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. நேற்று முன்தினத்தை விட கிலோவுக்கு ரூ.27 குறைந்து அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.731-க்கும், குறைந்தபட்சமாக ரூ.551-க்கும், சராசரியாக ரூ.675.41-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.