ஒற்றை தலைமை விவகாரம்: தலைமை தேர்தல் கமிஷனருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்


ஒற்றை தலைமை விவகாரம்: தலைமை தேர்தல் கமிஷனருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
x

ஒற்றை தலைமை விவகாரத்துக்கு பிறகு அ.தி. மு.க.வில் ஏராளமான சட்ட விதிமீறல்கள் நடந்து வருகிறது என தலைமை தேர்தல் கமிஷனருக்கு, ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சொந்த ஊரான தேனி சென்றிருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னை திரும்பி மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., ஐகோர்ட்டு வக்கீல் திருமுருகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அ.தி.மு.க. பொதுக்குழு ஜூலை 11-ந்தேதி நடைபெறுவதை தடுக்க ஐகோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சட்டவிதிகளில் திருத்தம்

கடந்த 12.9.2017 அன்று அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. இந்த 2 பதவிகளுக்கும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. மேலும், இதன் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, இந்த சட்டதிருத்தம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முறையாக தெரிவிக்கப்பட்டது. அது முதல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அ.தி.மு.க.வின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தங்களது கடமைகளை ஆற்றி வந்தோம். அதேபோன்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படியும் சட்டப்பூர்வ கடமைகளை ஆற்றி வருகிறோம்.

பொதுக்குழு கூட்டம்

இந்த புதிய சட்டத்திருத்த விதிக்கு பின்பு, இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையங்கள் நடத்திய பல்வேறு தேர்தல்களை அ.தி.மு.க. சந்தித்து உள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் 23.6.2022 அன்று நடத்தப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் 2.6.2022 அன்று அறிவிக்கப்பட்டது.

இதன் பின்பு, கட்சிக்கு ஒற்றை தலைமை குறித்து சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து 23.6.2022 அன்று நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட அந்த 23 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. அவை, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்தார். அதன்படி, பொதுக்குழுவில் எந்த விவாதங்களும் மேற்கொள்ளாமல் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வரலாற்றில் முதல்முறையாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பாட்டில் வீச்சு

இதைத்தொடர்ந்து, புதிய அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டு 11.7.2022 அன்று புதிய பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அந்த கூட்டத்தில் இருந்த போதும், இது தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து நான் (ஓ.பன்னீர்செல்வம்), வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்த கூட்டம் சட்ட விரோதமானது. அவைத்தலைவர் தேர்வு, அடுத்த பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு அனைத்துமே சட்ட விதிகளுக்கு புறம்பானது என்று தெரிவித்துவிட்டு வெளியேறினோம். பொதுக்குழு கூட்டத்தில் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கக்கூடாது, உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்து இருந்த போதிலும், வெளியாட்கள் பலர் சட்டத்திற்கு புறம்பாகவும், கோர்ட்டு உத்தரவுக்கு புறம்பாகவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதேநேரத்தில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த கூட்டத்தில் என் (ஓ.பன்னீர்செல்வம்) மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன.

சட்டத்திற்கு புறம்பானது

இதுபோன்ற சூழ்நிலையில், 27.6.2022 (நேற்று) அன்று காலை 10 மணிக்கு தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் முறையான கையெழுத்து இன்றி தலைமை நிலையச்செயலாளர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து எதுவும் இல்லை.

அதே நேரத்தில் அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி, தலைமை நிலைய செயலாளர் (எடப்பாடி பழனிசாமி) என்ற பெயரில் அழைப்பு விடுக்க முடியாது. அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் 2 பேரும் இணைந்துதான் இது போன்ற ஒரு கூட்ட அறிவிப்பை வெளியிட்டு கூட்டத்தை நடத்த முடியும். அவ்வாறு இணைந்து ஒரு அறிவிப்பு வெளியிடாமல் 27.6.2022 அன்று நடத்தப்பட்ட கூட்டம் சட்டத்திற்கு புறம்பானது. மேலும், அந்த கூட்டத்தில் 11.7.2022 அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று முடிவு எடுத்து இருப்பதும் விதிகளுக்கு புறம்பானது.

அ.தி.மு.க. பொருளாளர் என்ற அடிப்படையில் கட்சியின் வரவு-செலவு கணக்குகளை அந்த பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யவும் என்னை அனுமதிக்கவில்லை. 14.6.2022 முதல் தற்போது வரை அ.தி.மு.க. வில் நடந்த சட்ட விதிமீறல் சம்பவங்களை தேர்தல் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story