சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 5-ந் தேதி நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் நடை திறக்கப்படுவது வழக்கம். மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களிலும் கோவில் நடை திறக்கப்படும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2002-ம் ஆண்டு நடந்தது. இதேபோல் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் உபகோவிலான மலையில் உள்ள பெரியசாமி வகையறா கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெரியசாமி கோவிலில் உள்ள சுடு களிமண்ணால் செய்யப்பட்ட சாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. அந்த சிலைகளை புதிதாக பிரதிஷ்டை செய்ய கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் பாலாயம் நடத்தப்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் சிலைகள் செய்யும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறுவாச்சூர் மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதியும், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதியும் நடைபெறலாம் என்று கோவில் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. தற்போது அந்த நாட்களில் கோவில்களின் கும்பாபிஷேகம் நடைபெறுவது உறுதியானது.

அதன்படி வருகிற 27-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகமும், ஏப்ரல் 5-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. இதனால் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கான யாகசாலை அமைக்கும் பணிகள் மற்றும் பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று, நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story