சொத்து பிரச்சினைக்கு தீர்வு கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட அக்காள்-தங்கை


சொத்து பிரச்சினைக்கு தீர்வு கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட அக்காள்-தங்கை
x

சொத்து பிரச்சினைக்கு தீர்வு கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அக்காள்-தங்கை தர்ணாவில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. இதையொட்டி ஏராளமான பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அப்போது கையில் பையுடன் வந்த 2 பெண்கள் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பழனி சண்முகபுரத்தை சேர்ந்த நாகரத்தினம், அவருடைய தங்கை முத்துமாணிக்கம் என்பது தெரியவந்தது. மேலும் சொத்து பிரச்சினைக்கு தீர்வு கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் கலெக்டரிடம் சென்று கோரிக்கை மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி மாணவன்

இதேபோல் எரியோடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவன் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தான். அந்த மனுவில் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே நடந்த தகராறில் என்னுடன் சேர்த்து சில மாணவர்களை பள்ளிக்குள் வர தலைமை ஆசிரியர் அனுமதிக்கவில்லை. பின்னர் அவர்களின் பெற்றோர் வந்ததும் மற்ற மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதித்த அவர் என்னை மட்டும் பள்ளிக்குள் நுழைய விடவில்லை. எனவே என்னை மீண்டும் பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தான்.

பட்டிவீரன்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த சிலர் கொடுத்த மனுவில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்ட அனுமதி கிடைத்த பின்னரும் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் வீடு கட்டமுடியாமல் தவிக்கிறோம். எனவே விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.

கோவிலை அபகரிக்க முயற்சி

வேடசந்தூர் தாலுகா மம்மானியூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள கோவிலை சிலர் அபகரிக்க முயல்கின்றனர். அதனை நாங்கள் தடுக்கும் போது எங்கள் மீது சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறோம் என புகார் தெரிவிக்கின்றனர். எனவே கோவிலை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் கொடுத்த மனுவில் மேல்மலை கிராமங்களுக்கு என்று தனியாக 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

மேற்கண்ட மனுக்கள் உள்பட நேற்று நடந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 220 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து 2 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story