திருக்களாச்சேரியில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
திருக்களாச்சேரியில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
பொறையாறு:
பொறையாறு அருகே திருக்களாச்சேரி கிராமத்தில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 3-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 4-ம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தது. நேற்று காலை யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டது. பக்தர்கள் பரவசத்துடன் ஓம் சக்தி பராசக்தி என்று கோஷமிட்டனர். இதில் மயிலாடுதுறை, நாகை, காரைக்கால், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் திருக்களாச்சேரி முஸ்லிம் ஜமாத்தார்கள் சார்பில் குடமுழுக்கு வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டது. மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.