சிவாயம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது


சிவாயம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு உரக்கடைக்காரர் தற்கொலை வழக்கில் சிவாயம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் கணேஷ் (வயது 45). இவர் சிதம்பரம் பொய்யா பிள்ளைசாவடி புறவழிச்சாலை அருகே உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி பிரபாவதி (32). இவர்களுடைய மகள் சங்கமித்ரா (11), மகன் குருசரண்(9). இவர்கள் சிதம்பரம் தாயம்மாள் நகரில் வசித்து வருகின்றனர்.

கணேசுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் தொகையும் அதிகரித்தது. இதனால் அவர் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து கடந்த 23-ந்தேதி திராட்சை பழச்சாறில் எலி பேஸ்ட் விஷத்தை கலந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு, அவரும் குடித்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

சிறிது நேரத்தில் பிரபாவதி மற்றும் குழந்தைகள் வாந்தி எடுத்தனர். இதைபார்த்து மனம்தாங்க முடியாத அவர், புதுச்சத்திரம் அருகே உள்ள அன்னப்பன்பேட்டை கிராமத்திற்கு வந்து அங்குள்ள முந்திரி மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே கணேஷ், தனது நண்பரான பி.முட்லூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே உரக்கடை வைத்து நடத்தி வரும் அக்பர் அலி என்பவருக்கு வாட்ஸ்-அப்பில் ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். அதில் நான் சாகப்போகிறேன், எனது பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் எலி மருந்து கொடுத்துவிட்டேன். அவர்கள் வீட்டில் வாந்தி எடுத்து கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் அவர்களை காப்பாற்றுங்கள். எனது சாவுக்கு காரணம், சிவாயம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செங்குட்டுவன் மற்றும் சிலரது பெயரை குறிப்பிட்டிருந்தார்.

கைது

பின்னர் அக்பர் அலி, இதுகுறித்து கணேசின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று, கவலைக்கிடமான நிலையில் இருந்த பிரபாவதி மற்றும் குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசை தற்கொலைக்கு தூண்டியதாக சிவாயம் ஊராட்சி மன்ற தலைவி பொற்செல்வியின் கணவர் செங்குட்டுவன் (52), என்பவரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story