உதவி போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேர் காயம்
விழுப்புரம் அருகே மாணவனின் சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
திருவெண்ணெய்நல்லூர்:
திருவண்ணாமலை மாவட்டம் வலவிடாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாலு மகன் ரகுபதி(வயது 32). இவர் கடலூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக(பயிற்சி) உள்ளார். இவர் இன்று மாலை தனது குடும்பத்துடன் ஜீப்பில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டார். ஜீப்பை போலீஸ்காரர் தமிழ்குமரன் ஓட்டி வந்தார். விழுப்புரம் அருகே மனக்குப்பம் கூட்ரோட்டில் வந்தபோது ஆமூர்குப்பம் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து மகன் லோகேஷ்(13) சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஜீப், சைக்கிள் மீது மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கடலூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, இவரது மனைவி மரியவிஜயா, தாய் காசியம்மாள், தந்தை பாலு, போலீஸ்காரர் தமிழ்குமரன், மாணவன் லோகேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று 6 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம், திருக்கோவிலூர் ஆகிய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்துக்குள்ளான ஜீப், கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த மாணவன் லோகேஷ், மணக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.