பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டுகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு-டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்
பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் குறித்து தமிழக சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு போலீசாருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
ஊட்டி
பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் குறித்து தமிழக சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு போலீசாருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
பயிற்சி வகுப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டி பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் தமிழ்நாடு காவல்துறை சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டுகளுக்கு 2 நாட்கள் திறன் வளர்ப்பு மற்றும் பழங்குடியினர் சான்றிதழ்களை சரிபார்க்கும் பயிற்சி வகுப்பு ஊட்டி பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. விழாவுக்கு வந்தவர்களை பழங்குடியினர் நலத்துறை ஆணையாளர் அண்ணாதுரை வரவேற்றார்.
தமிழ்நாடு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தலைவர் போலீஸ் ஐ.ஜி. பிரபாகரன், பயிற்சி குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், முதல் நாள் பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள்? அவர்களின் வாழ்வியல் முறைகள், சமூக பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாசாரம் குறித்தும் பழங்குடியினர்களை அடையாளம் காண்பது எப்படி என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். மேலும் பழங்குடியினருக்கு உள்ள கல்வி, பொருளாதார மேம்பாடு, வங்கி கடன், தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
இரண்டாம் நாள் ஏதாவது பழங்குடியின கிராமத்துக்கு பயிற்சியாளர்கள் நேரில் சென்று கள ஆய்வு செய்வார்கள் என்றார்.
10 லட்சம் புகார்கள்
பயிற்சி வகுப்பிற்கு தலைமை தாங்கி, தொடங்கி வைத்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு பேசியதாவது:-
காவல்துறை பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு தரும் துறையாகும். இந்தப் பயிற்சி வகுப்பானது பழங்குடியின மக்களின் நலன் காத்தல் மற்றும் அவர்கள் தரும் புகார்களை காவல்துறையினர் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்ததாகும்.
தமிழ்நாடு காவல்துறையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சிறப்பாக செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களிலும் வழக்குகளை கையாள்வது, அடிப்படை அறிவு, செயல்திறன் குறித்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து 10 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 1.2 சதவீத பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இதில் பழங்குடியின மக்களுக்கு எதிரான புகாரின் அடிப்படையில் 75 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
பழங்குடியின சமூகத்தில் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் திருமணங்களில், பெண் திருமண வயது குறைந்திருக்கும் பட்சத்தில், வழக்கு பதிவு செய்யலாம். ஆனால், கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
போலியாக பழங்குடியின சான்றிதழ் பெற்று கல்வி மற்றும் அரசு வேலையில் சேர வாய்ப்பு உள்ளது.
எனவே பழங்குடியின மக்களின் சாதி சான்றிதழ்களை சரி பார்க்கவும், போலி சான்றுகளை கண்டறியவும் பழங்குடியினர் விஜிலென்ஸ் பிரிவு இயங்கி வருகிறது.
போலீசார் சான்றிதழ்களை சரி பார்க்கும் போது, உரியவர்களை நேரில் சென்று விசாரணை நடத்தி, கள ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு 3251 விண்ணப்பங்கள் பெற்ற நிலையில், 2600 பேருக்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்கள் மீதான விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும்.
மாணவர்கள் நீட், மத்திய அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க சாதி சான்றிதழ்களை சரிபார்க்க விண்ணப்பித்திருப்பார்கள், எனவே, போலீசார் சரியாகவும், துரிதமாகவும் விசாரித்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் உதயகுமார் நன்றி கூறினார். விழாவில், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் மற்றும் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் இருந்து போலீஸ் துணை சூப்பர்ண்டுகள் கலந்து கொண்டனர்.