தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோட்டீஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் சார்பில், கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 3 வருடங்கள் முடிந்திருக்க வேண்டும். தமிழில் நன்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆனால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசமாகும். பயிற்சி பெறும் அனைவருக்கும் பிரபல தனியார் கட்டுமான நிறுவனம் 100 சதவீத வேலைவாய்ப்பு வழங்கும்.
விண்ணப்பிக்கலாம்
அதாவது கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பெண்டர், சாரம் கட்டுபவர் ஆகிய தொழிலாளர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். இந்த 3 மாத பயிற்சியில் முதல் மாதம் தையூர் கட்டுமான கழக பயிற்சி மையத்திலும், பிற மாதங்களில் காஞ்சீபுரம் நீவளூரில் உள்ள தனியார் கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் பயிற்சி வழங்கப்படும். பின்னர் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தையூரில் நடக்கும். அத்துடன், பயிற்சியில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இதில் உணவுக்கு மட்டும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும்.
பயிற்சியில் சேர விருப்பமுள்ள தகுதியான உறுப்பினர்கள், தங்களது நலவாரிய உறுப்பினர் அட்டை, கல்வி சான்றிதழ்கள், ஆதார் எண் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களுடன் காஞ்சிரங்காலில் உள்ள சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.