கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
குமரி மாவட்ட கிராமப்புற இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கிராமப்புற இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வாழ்வாதாரத்தை மேம்படுத்த...
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற திட்டத்தின் மூலமாக கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு 'ஊரக இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குவதற்கான திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, ஆட்டோமோட்டிவ், சில்லரை வணிகம், தளவாடங்கள், கட்டுமானத்துறை, அழகுக்கலை, தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற எளிதில் வேலைவாய்ப்பு பெற இயலும் 120-க்கு மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு
மொத்த பயிற்சி ஒதுக்கீட்டில், சமூக ரீதியாக பின் தங்கியுள்ள பிரிவினரான பட்டியலினத்தினருக்கு 62 சதவீதம், மலைவாழ் பழங்குடியினருக்கு 3 சதவீதம் மற்றும் சிறுபான்மையினருக்கு 16 சதவீதம் என சிறப்பு ஒதுக்கீடு அளித்து பயிற்சி வழங்கப்படுகிறது. குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் கொண்ட குறுகிய கால பயிற்சிகள் உணவு, தங்குமிட வசதி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், கணினி பயிற்சி மற்றும் பயிற்சிக்குப்பின் திறன் பயிற்சி குழுமம் மூலம் வழங்கப்படும்.
பயிற்சியானது எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு பின் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சிக்கு ஏற்ப வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. இப்பயிற்சியை அளிப்பதற்கு தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 130 பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள் வழங்கி வருகின்றன. நடப்பாண்டில் மொத்தம் 500 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயன்பெறலாம்
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள 'மகளிர் திட்டம்' என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அலுவலகத்தையோ அல்லது ஒவ்வொரு வட்டாரத்திலும் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தையோ அணுகி விவரங்களை பெற்று பயிற்சியில் சேர்ந்து பயன் அடையலாம்.
மேலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவில் பங்கேற்றும் விருப்பமான பயிற்சியை தேர்வு செய்து பயன்பெறலாம். இதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள குமரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலக தொலைபேசி எண் 04652-279275-ஐ தொடர்பு கொண்டும் விவரங்களை கேட்டறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.