மாணவர்களுக்கு திறன் ஊக்க பயிற்சி
சர்வதேச அருங்காட்சியக தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு போதி தர்மா தற்காப்புகலை பயிற்சி பள்ளி மற்றும் டாட் இமேஜின் கலைக்கூடத்துடன் இணைந்து திறன் ஊக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். போதிதர்மா தற்காப்புகலை பயிற்சி பள்ளி ஆசிரியர் சுவிராஜ், டாட் இமேஜின் கலைக்கூட நிறுவனர் பாலாஜி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
முகாமில் தமிழர்களின் தற்காப்பு கலையான அடிமுறை பயிற்சி, சிலம்பு பயிற்சி ஆகியவற்றுடன் ஓவியங்களின் வகைகள், அடிப்படை ஓவியப்பயிற்சி உள்ளிட்ட திறன் ஊக்க பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 83 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாலையில் வேலூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் இளமுருகன் சான்றிதழ் வழங்கினார்.