பாலாற்றில் திறந்துவிடப்பட்ட தோல் கழிவுநீர்
ஆம்பூர் அருகே பாலாற்றில் திறந்துவிடப்பட்ட தோல் கழிவுநீர் நுரை பொங்கியபடி சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் மற்றும் ஷூ கம்பெனிகள் உள்ளன. இந்த தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை பெரிய தொட்டிகளில் நிரப்பி சுத்தப்படுத்துவதற்காக ஆம்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தொட்டிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் மழைக்காலங்களில் பாலாற்றில் திறந்து விடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள சிற்றாறுகள் மற்றும் கண்மாய்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பாலாற்றில் கலந்தது.
இதனை பயன்படுத்திக் கொண்ட ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே பாலாற்றில் திறந்து விடப்பட்டது. இன்று இரவு மாராபட்டு பாலாற்றில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து நுரை பொங்கியபடி சென்றது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுத்திகரிக்கப்படாத தோல் கழிவுநீரை பாலாற்றில் கலப்பதால் நிலத்தடிநீர் மாசு ஏற்படுவதுடன் பாலாற்றில் செல்லும் தண்ணீரை குடித்து கால்நடைகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
எனவே பாலாறு மாசு ஏற்படுவதை தடுக்க பாலாற்றில் தோல் கழிவுநீரை திறந்துவிட்ட நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.