அமைச்சர் உதயநிதி பற்றி அவதூறு: பா.ஜனதா மாவட்ட செயலாளர், இந்து முன்னணி நிர்வாகிகள் கைது


அமைச்சர் உதயநிதி பற்றி அவதூறு: பா.ஜனதா மாவட்ட செயலாளர், இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. அரசை பற்றி அவதூறாக பேசியதாக பா.ஜனதா மாவட்ட செயலாளர் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை,

பா.ஜனதா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 52). இவர், தனது முகநூல் பக்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்ற அமைச்சர் உதயநிதிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா மாவட்ட செயலாளர் முருகேசனை கைது செய்தனர்.

அவதூறு பேச்சு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அண்ணா சிலை அருகே இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் கோ.மகேஷ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரணி நகர தி.மு.க. செயலாளரும், நகரமன்ற தலைவருமான ஏ.சி.மணி ஆரணி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முதல்-அமைச்சர் பற்றி...

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 47). இவர் இந்து முன்னணியின் சேலம் கோட்ட தலைவராக உள்ளார். இவர் சம்பவத்தன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சக்திவேல் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

மாநில செயலாளர் கைது

இதேபோல செய்யாறில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் நடந்த கூட்டத்தில் இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகரன் திராவிட கட்சிகளையும், தி.மு.க அரசையும் மற்றும் மதஉணர்வை தூண்டும் வகையிலும் பேசியதாக தி.மு.க. நகர செயலாளர் விஸ்வநாதன் செய்யாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சென்னைக்கு வந்து மணலி மனோகரனை கைது செய்து செய்யாறு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story