மதுபோதையில் உல்லாசத்துக்கு அழைத்ததால்அரிவாளால் வெட்டி வாலிபர் படுகொலைஉடலை சாக்குமூட்டையில் கட்டி குட்டையில் வீசிய கள்ளக்காதலி கைது


தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மதுபோதையில் உல்லாசத்துக்கு அழைத்ததால் அரிவாளால் வெட்டி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி குட்டையில் வீசிய கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,


சங்கராபுரம் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வாலிபர் பிணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி அருகே மணலூர் கிராமத்தில் கல்குவாரி குட்டை உள்ளது. இந்த குட்டையில் நேற்று காலை சாக்கு மூட்டை ஒன்று மிதந்தது. அதில் ரத்தக்கறைகள் இருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாக்கு மூட்டையை மீட்டு பிரித்து பார்த்தனர். அதில், கழுத்தில் வெட்டுக்காயத்துடன் வாலிபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

கல்குவாரியில் உடல் வீச்சு

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சாக்குமூட்டையில் பிணமாக கிடந்த வாலிபர் மணலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த காத்தவராயன் மகன் தங்கதுரை(வயது 21) என்பதும், டிரைவரான அவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி கல்குவாரி குட்டையில் வீசிச்சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தங்கதுரை உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கள்ளக்காதல்

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

தங்கதுரை கடந்த 3 ஆண்டுக்கு முன்பு அதேஊரில் உள்ள கல்குவாரியில் லாரி டிரைவராக பணிபுரிந்தார். அப்போது, கல்குவாரியில் வேலை செய்த அதேஊரை சேர்ந்த அய்யனார் மனைவி விஜயபிரியா(29) என்பவருடன் தங்கதுரைக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தங்கதுரையுடனான கள்ளத்தொடர்பை விஜயபிரியா கைவிட்டார். மேலும் அவர் கல்குவாரிக்கு வேலைக்கு செல்லாமல், தனது வீட்டின் முன்பு கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.

செல்போன் தீவைத்து எரிப்பு

இதனை தாங்கிக்கொள்ள முடியாத தங்கதுரை, அடிக்கடி விஜயபிரியாவை சந்தித்து ஏன் என்னுடன் பழகுவதை நிறுத்திவிட்டாய்? என்று கேட்டு வந்தார். ஆனால் விஜயபிரியாவோ, அவரை திட்டியுள்ளார். கள்ளக்காதலியை மறக்க முடியாத தங்கதுரை, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபோதையில் விஜயபிரியாவின் வீட்டுக்கு சென்று, அவரை உல்லாசத்துக்கு அழைத்தார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் தங்கதுரை தகராறில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜயபிரியா இறைச்சி வெட்ட வைத்திருந்த அரிவாளால் தங்கதுரையின் கழுத்தில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தங்கதுரை சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்துள்ளார். இதையடுத்து விஜயபிரியா தடயங்களை மறைப்பதற்காக தங்கதுரையின் செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த துணிகளை வீட்டின் மாடியில் போட்டு தீவைத்து எரித்தார். பின்னர், தங்கதுரையின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்துச் சென்று கல்குவாரி குட்டையில் வீசிவிட்டு எதுவும் தெரியாததுபோல் இருந்துள்ளார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கள்ளக்காதலி கைது

இதையடுத்து விஜயபிரியாவை போலீசார் கைது செய்தனர். விஜயபிரியா மட்டும்தான் இந்த கொலையை செய்தாரா? அல்லது வேறுநபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதான விஜயபிரியாவின் கணவர் கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அய்யனார்-விஜயபிரியா தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story