மதத்தை அவமதித்து கோஷங்கள்: சு.வெங்கடேசன் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
மதுரையில் நடந்த பேரணியில் இந்து மதத்தை அவமதித்து கோஷங்கள் எழுப்பிய நபர்கள் மற்றும் பேரணிக்கு தலைமை தாங்கிய சு.ெவங்கடேசன் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து எழுச்சி முன்னணியினர் புகார் தெரிவித்தனர்
இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முரளியிடம் அவர்கள் 2 மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களில், "மதுரையில் கடந்த 29-ந்தேதி நடந்த செஞ்சட்டை பேரணியில் கலந்து கொண்ட சிலர் இந்து மத கடவுள்களை இழிவுபடுத்தி கோஷங்கள் எழுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. எனவே, இந்த பேரணியில் இந்து மதத்தை அவமதித்து கோஷங்கள் எழுப்பிய நபர்கள் மீதும், பேரணிக்கு தலைமை தாங்கிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், பெரியகுளம் தாலுகா மதுராபுரி கிராமத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.