ச.ம.க.வினர் தடையை மீறி உண்ணாவிரதம்
நாகர்கோவிலில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய சமத்துவ மக்கள் கட்சியினர் 165 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய சமத்துவ மக்கள் கட்சியினர் 165 பேரை போலீசார் கைது செய்தனர்.
உண்ணாவிரத போராட்டம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் அமல்படுத்த வேண்டும். போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இதேபோல் குமரி மாவட்ட ச.ம.க. சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
எனினும் தடையை மீறி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் ச.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் கால்டுவின் தலைமை தாங்கினார். மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் அமலன், ஜெயராஜ், டார்வின் தாஸ், கருப்பு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கைது
தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் 67 பெண்கள் உள்பட மொத்தம் 165 பேர் கைது செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர்.
அண்ணா விளையாட்டு அரங்கம் முன் ச.ம.க.வினர் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.