சிறு,குறு தொழில் நிறுவனங்கள் கருத்தரங்கு
ஓசூர்:-
தமிழ்நாடு சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ஒற்றை சாளர முறை தொடர்பான கருத்தரங்கு ஓசூரில் நடந்தது. கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். இதில், வழிகாட்டி தமிழ்நாடு நிர்வாக இயக்குனர் ஆஷா அஜித், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வந்தனா கார்க், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், ஓசூர் சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்க (ஹோஸ்டியா) தலைவர் வேல்முருகன், ஓசூர் சிப்காட் திட்ட அலுவலர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் கலெக்டர் பேசுகையில், முன்னேறி வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 110 பெருநிறுவனங்கள், ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும், கிரானைட், மா, காய்கறிகள், கொய்மலர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மோட்டார் வாகன உதிரி பாகங்கள், விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் 15 சதவீதம் இந்த மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொழில் முனைவோர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி தொழில் தொடங்கி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.