சிறுதொழில்- வியாபாரம் செய்யகடன் வேண்டி பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


சிறுதொழில்- வியாபாரம் செய்யகடன் வேண்டி பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x

சிறுதொழில்- வியாபாரம் செய்ய கடன் வேண்டி பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொிவித்துள்ளாா்.

ஈரோடு

சிறுதொழில் மற்றும் வியாபாரம் செய்ய கடன் வேண்டி பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

கடன் உதவி

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்துக்கான கடன் வழங்கப்பட உள்ளது. அதன்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், சாத்தியக்கூறு உள்ள சிறுதொழிகள் மற்றும் வியாபாரம் செய்ய பொதுக்காலக்கடன், பெண்களுக்கான புதிய பொற்கால கடன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடு கடன் ஆகிய திட்டங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். பொதுக்கால கடன் திட்டம், தனி நபர் கடன் திட்டம் மூலம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழு

பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் 5 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். மகளிர் திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.

விண்ணப்பம்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு மற்றும் வங்கிகோரும் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கத்தின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.

எனவே ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story