சேலம் கருமந்துறையில் சிறுதானிய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


சேலம் கருமந்துறையில் சிறுதானிய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x

கருமந்துறையில் சிறுதானிய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்

குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

கருமந்துறையில் வேளாண்மை கட்டிடம் வாடகை கட்டிடத்தில் தான் செயல்பட்டு வருகிறது. அங்கு பழ பண்ணைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் வேளாண்மை துறைக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டும். தலைவாசல் கால்நடை பூங்கா வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அமைந்தால் நிலத்தடி நீருடன், மண் வளமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி அந்த திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.

கொள்முதல் நிலையம்

தம்மம்பட்டியில் ஓடையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். வாழப்பாடியில் உழவர் சந்தை விரைவில் அமைக்க வேண்டும். கருமந்துறையில் சிறுதானியங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இதனை விற்பனை செய்ய வேண்டும் என்றால் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தான் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. எனவே கருமந்துறையில் சிறுதானிய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் வருவாய் அலுவலர் மேனகா பேசும் போது, மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் சிறுதானியம் குறித்து பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வேளாண்மை துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சிங்காரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் சாந்தி, கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் நீலாம்பாள், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story