சிறுதானிய பயன்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊட்டி, கோத்தகிரியில் சிறுதானிய பயன்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோத்தகிரி,
ஊட்டி அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஷீஜா வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எபநேசர் தலைமை தாங்கினார். சிறுதானியங்களின் பயன்பாடு மற்றும் நன்மைகள் குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஷிப்லா மேரி விளக்கினார்.
இதில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 300 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில், கோத்தகிரியில் சிறுதானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாராள் தலைமை தாங்கி பேசும்போது, காலநிலை மாற்றத்தை தாண்டி வளரக்கூடிய சிறுதானியங்கள் பயிரிட ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் பொருட்டு சிறுதானிய திருவிழாக்கள், சத்தான உணவு, உத்தரவாதத்திற்கான உணவு திருவிழாக்கள் போன்ற பிரசாரம் மூலம் பயன்படுத்தி கிராமங்கள், பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார். தொடர்ந்து கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் சிறுதானிய பொங்கல் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.