சின்ன வெங்காய விவசாயிகள் கவலை
சின்ன வெங்காய விவசாயிகள் கவலை
பல்லடம்
பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அது மட்டுமன்றி நல்ல தரமான சின்ன வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயத்துக்கு ஏற்ற தட்பவெப்பநிலை நல்ல விளைச்சலை கொடுத்து வருகிறது. ஆரம்ப காலங்களில் நாட்டு ரகங்களை சாகுபடி செய்து வந்த விவசாயிகள் தற்போது உயர்ரக சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். அனைத்து சமையலுக்கும் சின்ன வெங்காயம் பயன்படுத்தப்படுவதால் எப்போதும் அதற்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. எனவே விவசாயிகள் ஆர்வமுடன் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். இதற்கிடையே
தற்போது சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் உரிய விலை இல்லாததாலும் மற்றும் விளைச்சல் குறைவாலும் சின்ன வெங்காய விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து சின்ன வெங்காய விவசாயி பழனிச்சாமி கூறியதாவது:-
ஒரு ஏக்கர் வெங்காயம் பயிரிட விதை வெங்காயம் ரூ.30 ஆயிரம், உரம் இடுவதற்க்கு ரூ. 15ஆயிரம், பூச்சி மருந்தடிப்பதற்க்கு ரூ. 15 ஆயிரம், களைகள் எடுக்க ரூ.20 ஆயிரம் என ரூ. 90 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. நல்ல விளைச்சல் என்றால் ஒரு ஏக்கருக்கு சுமார் 7 டன் முதல் 8 டன் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது விளைச்சல் குறைந்துள்ளது. இந்த நிலையில் வெங்காயம் விலை குறைந்ததால் கிலோ ஒன்றுக்கு ரூ. 25 முதல் ரூ.30 வரை கொள்முதல் செய்கிறார்கள். இதனால் வெங்காய விவசாயத்தில் போட்ட முதலிடு திரும்ப கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-----------