திருச்செந்தூரில் சிறு வியாபாரிகள் திடீர் சாலைமறியல்; 94 பேர் கைது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்ய சிறு வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியிலில் ஈடுபட்ட சிறு வியாபாரிகள் 94 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்ய சிறு வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியிலில் ஈடுபட்ட சிறு வியாபாரிகள் 94 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறு வியாபாரிகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் பூ, பழங்கள், டீ, ஐஸ், வடை, சுண்டல் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி சிறு வியாபாரிகள் கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்ய கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து போலீசார் துணையுடன் கோவில் வளாகத்தில் இருந்து சிறு வியாபாரிகள் அகற்றப்பட்டனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிறுவியாபாரிகள், கோவில் இணை ஆணையர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அனுமதி மறப்பு
தொடர்ந்து கடந்த 21-ந்தேதி உதவி கலெக்டர் அலுவலகத்தில் சிறுவியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருச்செந்தூருக்கு வரும் அறநிலையத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு சிறுவியாபாரிகளிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் மீண்டும் வியாபாரம் செய்து கொள்ள சிறு வியாபாரிகளை அனுமதித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கோவில் வளாகத்தில் சிறுவியாபாரிகள் வியாபாரம் செய்ய மீண்டும் தடை விதிக்கப்பட்டது. அங்கு வியாபாரம் செய்த சிறு வியாபாரிகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
சாலைமறியல்
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்படுவதாக கூறி, சிறு வியாபாரிகள் அகில பாரத இந்து மகா சபா கிளை தலைவர் மாயாண்டி தலைமையில், நேற்று திருச்செந்துர் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
உடனே திருச்செந்தூர் தாலூகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட 41 பெண்கள் உள்பட 94 சிறுவியாபாரிகளை கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.