'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் புதுப்பொலிவு பெற்ற திருப்பூர் பழைய பஸ் நிலையம்
டாலர் சிட்டியான திருப்பூரில் வெளிமாவட்ட தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில தொழிலாளர்களும் அதிக அளவில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்கள். மாநகரின் மக்கள் தொகை 12 லட்சத்தை தாண்டிவிட்டது. மாநகரின் இதய பகுதியில் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையம் கடந்த 1960-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த 1991-ம் ஆண்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. 218 கடைகள் இந்த வளாகத்தில் இருந்தன. தரைத்தளம், முதல் தளத்துடன் பழைய பஸ் நிலைய கட்டிடம் இருந்தது.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த பஸ் நிலையத்தில் நெருக்கடி அதிகரித்து சென்றது. தாராபுரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள், பல்லடம், உடுமலை, காங்கயம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. தொழிலாளர்களின் வருகை அதிகரிப்பு காரணமாக பஸ் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பழைய பஸ் நிலையத்தை முழுவதுமாக இடித்து புதுப்பொலிவுடன் கட்ட திட்டமிடப்பட்டது.
ரூ.36½ கோடியில் பணிகள்
ரூ.36 கோடியே 50 லட்சத்தில் பழைய பஸ் நிலையம் தரைத்தளம், முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு, பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் கோவில்வழியில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. சேலம், ஈரோடு மாவட்ட பஸ்கள் யுனிவர்செல் தியேட்டர் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்தும், கோவை, உடுமலை பஸ்கள், மினிபஸ்கள், டவுன் பஸ்கள் பழைய பஸ் நிலையம் முன்புறம் இருந்தும் இயக்கப்படுகிறது.
புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையம், பிறைநிலா வடிவில் தரைத்தளம், முதல்தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. வணிக வளாகத்தை சுற்றி பஸ்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மின்சார பஸ்களுக்கு சார்ஜ் செய்யும் கட்டமைப்பு, பயணிகள் உடமைகள் பாதுகாப்பு அறை, பயணிகள் இருக்கை, கடைகள், நடைமேம்பாலம், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்டவை நவீன முறையில் அமைக்கப்பட்டு வருகிறது.
அடுக்குமாடி வாகன நிறுத்தம்
90 சதவீதத்துக்கு மேலான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. வணிக வளாக கட்டிடத்தின் முகப்பில் கண்ணாடி பொருத்தப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. அலங்கார வளைவு அமைக்கும் பணி நடக்கிறது. அதுபோல் முகப்பு கட்டிடத்தில் திருப்பூர் 'நிப்ட் டீ' கல்லூரி மாணவர்கள் மூலமாக 14 வண்ணங்களை பயன்படுத்தி வர்ணம் தீட்டும் பணி நடை பெற்று வருகிறது. திருப்பூரின் பிரதான தொழிலான பனியன் தொழில் சார்ந்த படங்கள் வரையப்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கு காலத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் நிர்ணயிக்கப்பட்ட கால அளவையும் தாண்டி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதுபோல் அடுக்குமாடி வாகன நிறுத்தம் பழைய பஸ் நிலையத்தின் அருகில் ரூ.18 கோடியே 10 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சுமார் 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருவதால் பழைய பஸ் நிலைய பகுதியில் இடநெருக்கடி ஏற்பட்டு பயணிகள் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலை உள்ளது. பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். பஸ்களை நிறுத்துவதற்கும், பயணிகள் ஒதுங்குவதற்கும் இடமின்றி அந்தப்பகுதியில் தினமும் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலை உள்ளது.
எனவே உடனே அந்த பஸ்நிலையத்தை திறந்து பொதுமக்களின் சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
கருணாநிதி பெயர்
இந்த நிலையில் பொலிவுபடுத்தப்பட்ட பழைய பஸ் நிலையத்துக்கு முத்தமிழறிஞர் கருணாநிதி பெயர் சூட்டுவதற்கு திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடைகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அந்த பணிகள் நிறைவடைந்ததும் விரைவில் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் திறப்பு
இதுகுறித்து மேயர் தினேஷ்குமாரிடம் கேட்டபோது, 'பஸ் நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்து விட்டது. அங்குள்ள கடைகளுக்கு ஏற்கனவே தனித்தனியாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது புதிதாக அமைய உள்ள கடைகளுக்கு மின் இணைப்பு மொத்தமாக வழங்குவதாக தெரிவிக்கிறார்கள். இது போல் தான் மற்ற பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தபோதிலும், தனித்தனியாக கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கினால் வசதியாக இருக்கும். மின்வாரிய அதிகாரிகளிடம் இதுதொடர்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரால் விரைவில் பழைய பஸ் நிலையம் திறக்கப்படும்' என்றார்.