ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 91 சதவீதம் நிறைவு


ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 91 சதவீதம் நிறைவு
x

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 91 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

வேலூர்

அமைச்சர்கள் ஆய்வு

வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அதன் ஒரு பகுதியாக அரியூரில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

இதில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் ரத்தினசாமி, மாநகராட்சி நியமன குழு உறுப்பினர் கணேஷ்சங்கர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தண்ணீர் வினியோகம்

கூட்டதுக்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு தேவையான நிதிகளும் உடனடியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் திட்டங்களை பொறுத்தவரையில் மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றும் போது, 69 இடங்களில் குழாய்கள் மோசமாக உள்ளது. அங்கு 19 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு வருகிற 15-ந் தேதிக்குள் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.

மாநகராட்சி பொருத்தவரையில் எந்தெந்த பகுதிகளில் சாலைகள் போட வேண்டுமோ, அதுகுறித்து ஆய்வு செய்து சாலைகளுக்கு ஏற்றவாறு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மின்விளக்குகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மாநகராட்சிக்கு சாலைகளுக்காக ரூ.280 கோடி வழங்க உள்ளோம். மேலும் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.314 கோடி நிதி வழங்கப்படும். மேலும் தேவைக்கேற்ப நிதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

91 சதவீதம்

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 91 சதவீதம் முடிந்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.900 கோடி நிதியில் எடுத்துக் கொள்ளப்பட்ட 114 பணிகளில் 23 பணிகள் மட்டும் முடிக்கப்படாமல் உள்ளது. அந்த பணிகள் விரைவில் முடிக்க தீவிரம் காட்டப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தை பொருத்தவரையில் 29 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டும். அந்த பணிகளும் முடிக்கப்படும்.

பூங்காக்கள் சீரமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட உள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.7 ஆயிரம் கோடி செலவில் பணிகள் நடந்துள்ளது. 2-வது குடிநீர் திட்டத்தின்கீழ் காவிரி குடிநீர் வழங்கும் பொருட்டு வேலூர் (ஒரு பகுதி), திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் (ஒரு பகுதி) ஆகிய மாவட்டங்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். கடன் வரப்பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும்.

வேலூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டுவதற்கு மேலும் 2 இடங்கள் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பைகள் சேகரிக்க தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story