'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.5 கோடியில் மேம்பாட்டு பணிகள்


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.5 கோடியில் மேம்பாட்டு பணிகள்
x

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.5 கோடியில் மேம்பாட்டு பணிகள்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரில் அன்னை சத்யா விளையாட்டு மைதானம் உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மைதானத்தில் தஞ்சை மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.தஞ்சை மாநகர மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் ரூ.3 கோடி மதிப்பில் 1,200 மீட்டர் தூரத்திற்கு நடைபாதை, 750 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை, 75 மின்விளக்குகள், 75 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்கேட்டிங் தளம்

மேலும் ரூ.2 கோடி மதிப்பில் திறந்தவெளி ஸ்கேட்டிங் தளம், கையுந்து பந்து மைதானம் மேம்படுத்துதல், கழிவறை வசதி அமைத்தல், நுழைவு வாயில் அமைத்தல் போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள் திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் டேனியல் டேவிட் வரவேற்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்டுள்ள ரூ.5 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை திறந்து வைத்தார்.முதலில் ஸ்கேட்டிங் மைதானத்தை திறந்து வைத்த அவர், மாணவ-மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் பயிற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நடைபாதை, கையுந்துபந்து மைதானத்தை திறந்து வைத்து மகளிர் தினத்தையொட்டி மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.விழாவில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மலர்தூவி வரவேற்பு

இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு சென்று மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா படத்தை திறந்து வைத்தார். முன்னதாக தஞ்சைக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விளாங்குடி, பள்ளியக்கிரஹாரம் பிரிவு சாலை, கரந்தை பஸ் நிறுத்தம், கொண்டிராஜபாளையம் ரவுண்டானா, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை, புதுஆற்றுப்பாலம், அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.


Next Story