போலீஸ் நிலையங்களில் ஸ்மார்ட் காவலர் செயலி


போலீஸ் நிலையங்களில் ஸ்மார்ட் காவலர் செயலி
x

அரக்கோணம் மற்றும் திமிரி போலீஸ் நிலையங்களில் ஸ்மார்ட் காவலர் செயலியை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் அறிமுகம் செய்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் மற்றும் திமிரி போலீஸ் நிலையங்களில் ஸ்மார்ட் காவலர் செயலியை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் அறிமுகம் செய்தார்.

ஸ்மார்ட் காவலர் செயலி

தமிழக போலீஸ்‌ டி.ஜி.பி.‌ சைலேந்திரபாபு உத்தரவுப்படி, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் வழிகாட்டுதலின் பேரில், டி.ஐ.ஜி. சத்தியபிரியா மேற்பார்வையில், ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகம்செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமை தாங்கி ராணிப்பேட்டை‌‌ மாவட்டத்தில் உள்ள 2 உட்கோட்டங்களில் முறையே ஒரு போலீஸ் நிலையத்தை முன்னோட்டமாக கொண்டு அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையம், திமிரி போலீஸ் நிலையத்தில் ஸ்மார்ட் காவலர் செயலியை அறிமுகம் செய்துவைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

பதிவேற்றம்

இந்த திட்டத்தில் இரவு மற்றும் பகல் ரோந்து செல்லும் போலீசார் ஸ்மார்ட் காவலர் என்ற ஆன்ட்ராய்டு மொபைல் செயலியில் தனது ரோந்து பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையம், வங்கி, பூட்டிய வீடுகள் மற்றும் பிற முக்கிய பகுதிகளுக்கு சென்று தணிக்கை செய்யும் போது அதன் விவரங்களை ஆன்லைன் முறையில் மேற்படி செயலியின் மூலமாக பதிவேற்றம் செய்வார்கள்.

மேலும், அவரவர் சரகத்தில் உள்ள கெட்ட நடத்தைக்காரர்கள், வரலாற்று பதிவேடு குற்றவாளிகள், சந்தேக நபர்கள் ஆகியோர்களின் நடவடிக்கைகளை செல்போன் செயலி மூலம் கண்காணிக்கப்படுவார்கள். அதனை இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் இந்த செயலி மூலம் கண்காணித்து காவலர்களுக்கு அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள்.

குற்றம் நடைபெறாமல்

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அடிக்கடி குற்றம் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்கள், மூத்த குடிமக்கள் தனியாக வசிக்கும் வீடுகள் மற்றும் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது பூட்டிய வீடுகள் பற்றிய விவரங்களை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து சென்றால் அந்த இடங்கள் பற்றிய விபரங்களை காவலர் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ரோந்து காவலர்கள் மூலம் தொடர் கண்காணிப்பு உறுதிப் படுத்தப்பட்டு குற்றம் நடைபெறாமல் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்), முத்துகருப்பன் (இணையவழி குற்றப்பிரிவு), துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அரக்கோணம் யாதவ் கிரிஷ் அசோக் ராணிப்பேட்டை பிரபு , போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story