ரூ.54 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்


ரூ.54 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
x

ரூ.54 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

அதிகாரிகள் சோதனை

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ள தங்கம் கடத்தலுக்கு உறுதுணையாக இருப்பவர்கள், அந்த நாட்டில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளிடம் தங்கத்தை கொடுத்து அனுப்பி, அதனை திருச்சி விமான நிலையத்தில் உள்ளவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்றும், அதற்கு சன்மானமாக தொகைகளை வழங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் விமானத்தை சுத்தம் செய்வதற்காக விமான நிறுவன ஊழியர்கள் விமானத்திற்குள் சென்றனர்.

விமான கழிவறையில்...

அப்போது விமான கழிவறையில் கேட்பாரற்று கிடந்த பொட்டலம் ஒன்றை எடுத்தபோது அதில் பசை வடிவில் ரூ.18 லட்சம் மதிப்பிலான 360 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் தங்கத்தை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த தங்கத்தை யாரேனும் கடத்தி வந்து, விமான கழிவறையில் போட்டுச் சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடத்தல் தங்கம் பறிமுதல்

இதேபோல் திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பெரம்பலூரை சேர்ந்த முகமது இப்ராகிம் என்ற பயணியின் உடைமையை சோதனை செய்தபோது, அவர் உடலில் மறைத்து பசை வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.36 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான 755 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story