கூடலூர் வழியாக ஜீப்பில் 67 கிலோ கஞ்சா கடத்தல்


கூடலூர் வழியாக ஜீப்பில் 67 கிலோ கஞ்சா கடத்தல்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:45 PM GMT)

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கூடலூர் வழியாக ஜீப்பில் 67 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

கூடலூர்

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கூடலூர் வழியாக ஜீப்பில் 67 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ரகசிய அறைகள்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்துக்கு காரில் கஞ்சா கடத்துவதாக காளிகாவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கூடலூர்-மலப்புரம் சாலையில் செருதோடு பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படி வந்த ஒரு ஜீப்பை போலீசார் நிறுத்தினர்.

அப்போது அதில் இருந்த சிலர் ஜீப்பில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். தொடர்ந்து அவர்களை போலீசார் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் போலீசில் சிக்கினார். பின்னர் ஜீப்பை சோதனை செய்தனர். அதில், அதன் உள்ளே ரகசிய அறைகள் அமைத்து இருப்பதை கண்டனர். மேலும் இருக்கைகள் அடியிலும் அறைகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அறைகளை திறந்து பார்த்த போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

67 கிலோ கஞ்சா

அந்த ரகசிய அறைகளில் 67 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காளிகாவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பிடிபட்ட கூடலூர் மண்வயலை சேர்ந்த ஜஸ்டின்(வயது 28) என்ற வாலிபரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து கர்நாடகா, கூடலூர் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்த கஞ்சா பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story