ஆரல்வாய்மொழி அருகே பால் வேனில் புகையிலை பொருட்கள் கடத்தல்; டிரைவர் கைது


ஆரல்வாய்மொழி அருகே பால் வேனில் புகையிலை பொருட்கள் கடத்தல்; டிரைவர் கைது
x

பால் வேனில் கடத்திக் கொண்டு வரப்பட்ட 680 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

பால் வேனில் கடத்திக் கொண்டு வரப்பட்ட 680 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பால் வேன்

வெளி மாவட்டங்களில் இருந்து குமரிக்கு நூதன முறையில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசாருடன் ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்டீபன், ஜான் கென்னடி ஆகியோர் குமாரபுரம் சந்திப்பில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக தனியாருக்கு சொந்தமான பால் வேன் ஒன்று வந்தது. உடனே அந்த வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது பால் பாக்கெட் வைத்திருக்கும் பெட்டிகள் இடையே மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புகையிலை பொருட்கள் கடத்தல்

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரியில் இருந்து நாகர்கோவிலுக்கு பால் வேனில் 680 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

உடனே அந்த புகையிலை பொருட்களை போலீசார் வேனுடன் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த டிரைவர் செந்தமிழ் செல்வனை (வயது 22)கைது செய்தனர்.

கிருஷ்ணகிரியில் இருந்து...

சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் செந்தமிழ் செல்வன் டிரைவராக பணிபுரிந்ததாகவும், அந்த நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரியில் இருந்து நாகர்கோவிலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியதன் பேரில் பால்வேனை கொண்டு வந்ததாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் பால்வேன் உரிமையாளர் உள்பட மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பால் வேனில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story