விவசாய நிலங்களில் இரைதேடும் நத்தை குத்தி நாரைகள்
ஏர்வாடி அருகே விவசாய நிலங்களில் நத்தை குத்தி நாரைகள் இரைதேடின.
சிக்கல்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் பெரும்பாலான கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் சாயல்குடி அருகேயுள்ள மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் மற்றும் முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் உள்ள காஞ்சிரங்குளம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயங்களும் தண்ணீர் இன்றி வறண்டு போனதால் இந்த ஆண்டு பறவைகள் இதுவரை வரவில்லை. இதனிடையே மாவட்டத்தில் பல ஊர்களிலும் ஏராளமான பறவைகள் நீர் நிலைகளை தேடி அலைந்து வருகின்றன.
இந்த நிலையில் ஏர்வாடி அருகே இதம் பாடலுக்கும்-சிக்கலுக்கும் இடைப்பட்ட பகுதியில் விவசாய நிலப்பகுதிகளில் இரை தேடுவதற்காக ஏராளமான நத்தைகுத்தி நாரைகள் அதிகளவில் குவிந்துள்ளன. இந்த நாரைகளோடு கருப்பு அரிவாள்மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், கொக்குகள் உள்ளிட்ட பறவைகளும் குவிந்துள்ளன. இதேபோல் திருப்புல்லாணி அருகே உள்ள விவசாய நிலம் அருகே தேங்கி நிற்கும் நீரிலும் இரை தேடுவதற்காக ஏராளமான நத்தை குத்தி நாரை மற்றும் வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகளும் குவிந்துள்ளன.