பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பால் பரபரப்பு
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள குப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 21). இவர் நேற்று பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அலுவலகத்திற்குள் சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்தபோது, மோட்டார் சைக்கிளின் என்ஜின் பகுதியில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த பாம்பு மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் புகுந்து கொண்டது. இதையடுத்து இருக்கை கழற்றப்பட்டு, அந்த பாம்பு பிடிக்கப்பட்டது. பிடிபட்ட பாம்பு 2 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் என்பது தெரியவந்தது. பின்னர் அது வனப்பகுதியில் விடப்பட்டது. மோட்டார் சைக்கிளுக்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.