நலிவடைந்த சுண்ணாம்பு உற்பத்தி தொழில்


நலிவடைந்த சுண்ணாம்பு உற்பத்தி தொழில்
x
திருப்பூர்


உடுமலை பகுதியில் நலிவடைந்த சுண்ணாம்பு உற்பத்தி தொழிலை காப்பாற்ற அரசு கைகொடுக்குமா? என அதனை உற்பத்தி செய்பவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சுண்ணாம்பு உற்பத்தி தொழில்

உடுமலை அருகே சுண்ணாம்பு உற்பத்திக்கு பெயர் பெற்ற கிராமமாக விளங்கி வருகிறது ஆலம்பாளையம் ஊராட்சி. இந்தப் பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறையில் சுண்ணாம்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகின்றது. இங்கு உற்பத்தியாகின்ற சுண்ணாம்பு உடுமலை சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி கோவை, பழனி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதன் பின்பு ஏற்பட்ட நாகரிகத்தின் வளர்ச்சி, மூலப் பொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, பயன்பாடு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுண்ணாம்பு உற்பத்தி தொழில் அழிவின் விளிம்பில் நின்று கொண்டு உள்ளது. இதனால் ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே தற்போது சுண்ணாம்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓடைக்கற்கள்

இதுகுறித்து சுண்ணாம்பு உற்பத்தியாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

இந்த தொழில் பாரம்பரியமும், பழமையும் மிக்க தொழிலாகும். சுண்ணாம்பை உற்பத்தி செய்வதற்கு அடுப்புக்கரி, தேங்காய் மட்டை, விறகு, ஓடை கற்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது. சுண்ணாம்பு தயாரிப்புக்கான ஓடைகற்களை கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து ஒரு யூனிட் ரூ.6 ஆயிரம் கொடுத்து வாங்கி வருகின்றோம்.

பின்னர் ஓடைக்கற்களை சிறு, சிறு கற்களாக உடைத்து சூளையில் இட்டு மற்ற மூலப்பொருட்களுடன் சேர்த்து நாள் முழுவதும் வேக வைக்க வேண்டும். இதனால் பழுப்பு நிறத்தில் உள்ள ஓடைக் கற்கள் வெந்நிறமாக உருமாறி சுண்ணாம்பு கல்லாகிவிடும். அதனை தண்ணீரில் ஊற வைத்தால் கால்சியம் சத்து மிகுந்த சுண்ணாம்பு தயாராகி விடும்.

3சூளைகளில் மட்டுமே உற்பத்தி

கடந்த காலங்களில் 50-க்கும் மேற்பட்ட சூளைகளில் முழு நேர தொழிலாக சுண்ணாம்பை தயாரித்து சுற்றுப்புற கிராமங்களுக்கு மாட்டு வண்டிகளில் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தோம். நாளடைவில் ஏற்பட்ட மாற்றத்தால் சுண்ணாம்பு உற்பத்தி தொழில் படிப்படியாக தொய்வடைந்து வீழ்ச்சி அடைந்து விருகிறது. இதனால் நாங்க உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருந்த பல குடும்பங்கள் பிழைப்பு தேடி வேறு வேலைக்கு சென்று விட்டனர். தற்போது 3 சூளைகளில் மட்டுமே சுண்ணாம்பு உற்பத்தி செய்து வருகின்றோம்.

சுண்ணாம்பு வீட்டுக்கு வெள்ளை அடிப்பதற்கு மட்டுமின்றி கோழிப்பண்ணை, மீன் வளர்ப்பு, பட்டுப்பூழு, ஆடு.மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு கால்சியம் சத்தை அளிப்பதுடன் சுகாதார மேம்பாட்டுக்கும் உதவி புரிகிறது.

அரசு உதவுமா?நலிவடைந்த சுண்ணாம்பு உற்பத்தி தொழில்

இந்த சூழலில் ஒரு மூட்டை தூள்கரி ஒரு டன் விறகு தலா ரூ.6 ஆயிரமாகவும், தேங்காய் மட்டை ஒன்று ரூ.1.50 உயர்ந்து உள்ளதுடன் ஆள் கூலி ரூ.550 ஆக அதிகரித்து உள்ளது.

இதனால் லாபத்தில் சரி பாதி செலவுக்கே சென்று விடுவதால் சேதம் அடைந்த சுண்ணாம்பு சூளையை சீரமைக்கவும் முடியவில்லை.

இதனால் வரும் காலங்களில் சுண்ணாம்பு உற்பத்தி தொழில் முற்றிலும் அழிந்து விடக்கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு சுண்ணாம்பு உற்பத்தி தொழிலுக்கு ஊக்கமளிப்பதுடன் நிதி உதவி அளித்து உதவியும் புரிய வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.


Next Story