குமரியில் பனிப்பொழிவு நீடிக்கிறது வாகன ஓட்டிகள் அவதி
குமரியில் பனிப்பொழிவு நீடிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.
நாகர்கோவில்,
குமரியில் பனிப்பொழிவு நீடிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.
பனிப்பொழிவு நீடிக்கிறது
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் மழை இல்லை. மாறாக காலை மற்றும் இரவில் கடும் பனிப்பொழிவாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் காலை நேரத்தில் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனத்தை ஓட்டி செல்வதை காண முடிகிறது. நேற்று மாலை 4 மணிக்கு சுசீந்திரம் புறவழிச்சாலை பகுதி மற்றும் முருகன்குன்றம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது.
சூரிய உதயம் தெரியவில்லை
சூரிய உதயத்தை பார்க்க கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் வருகின்றனர். ஆனால் காலையில் பனிப்பொழிவு காரணமாக சூரிய உதயம் தெரியவில்லை. கடந்த 2 நாட்களாக இதே நிலை தான் கன்னியாகுமரியில் நிலவுகிறது.
அதே சமயத்தில் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் அய்யப்ப பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ச்சியான பனிப்பொழிவால் ஊட்டி போல் குளுகுளு சீசனாகவே கன்னியாகுமரி காணப்படுகிறது.
அணை பகுதியில் மழை
அதே சமயத்தில் பனிப்பொழிவுக்கு இடையே குமரி மாவட்ட அணை பகுதியில் மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 781 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 792 கனஅடி நீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் நேற்றுமுன்தினம் காலை அணையில் இருந்து வினாடிக்கு 1,024 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று காலை 732 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 297 கனஅடி நீர் வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீரும் திறக்கப்பட்டன. சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 30 கனஅடி நீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 45 கனஅடி நீரும் வருகிறது. மாநகரின் குடிநீர் தேவைக்காக முக்கடல் அணையில் இருந்து வினாடிக்கு 8.9 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 8.9 கனஅடி நீர் வருகிறது.
அருவியில் வெள்ளப்பெருக்கு
பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டாலும் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. நேற்று 4-வது நாளாக சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.