இதுவரை 11¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


இதுவரை 11¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

நீலகிரியில் வருகிற 4-ந் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுவரை 11¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் வருகிற 4-ந் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுவரை 11¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 1,287 நிலையான கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் 60 நடமாடும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.

இதில் 1 நர்சு, தரவு பதிவாளர், 2 அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 4 பேர் இருப்பார்கள். இதன்படி மொத்தமாக 1,347 முகாம்களில் 5,536 பணியாளர்கள் பணியில் ஈடுபடுவர். இதில் முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி மேலும் 18 வயது முடிவடைந்தவர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ரத்த அழுத்தம்

எனவே, 18 வயது முடிவடைந்த அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். குறிப்பாக ரத்த அழுத்தம், இதய சம்மந்தமான நோயுள்ளவர்கள், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் சம்மந்தமான நோயுள்ளவர்கள், நாள்பட்ட வியாதி உள்ளவர்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் என அனைவரும் தவறாமல் முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் 5,93,748, 2-வது டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் 5,92,242 என மொத்தம் 11,85,990 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். எனவே, தகுதியான நபர்கள் அனைவரும் தங்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் தடுப்பூசி செலுத்த ஆவண செய்ய வேண்டும். கொரோனா இல்லாத நீலகிரியை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story