இதுவரை 1,250 ஏக்கரில்நெல் அறுவடை பணி முடிந்தது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நடந்த கும்பப்பூ சாகுபடியில் இதுவரை 1,250 ஏக்கரில் நெல் அறுவடை நடந்துள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கும்பப்பூ சாகுபடி
தமிழகத்தில் விவசாய தொழில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் குமரி மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் நெல், வாழை, தென்னை, ரப்பர், மரச்சீனி கிழங்கு, அன்னாசி, மிளகு, கோகோ என பல வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் விவசாயத்தை பொறுத்தவரையில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக முறையில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு போகத்திலும் 6 ஆயிரம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டது. இதில் 5,611 எக்டேர் (14,027 ஏக்கர்) பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல் அறுவடை பணிகள் தொடங்கியிருக்கிறது.
அறுவடை பணி
தற்போது சுசீந்திரம், தேரூர், கடுக்கரை, ஈசாந்தி மங்கலம் ஆகிய பகுதிகளில் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. பறக்கை பத்து பகுதியில் நெல் அறுவடை தொடங்கியிருக்கிறது. இதுவரை 500 எக்டேரில் அதாவது 1250 ஏக்கரில் நெல் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குமரி மாவட்டத்தில் நெல் சாகுபடியைப் பொறுத்தவரையில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதிகள், குருந்தங்கோடு வட்டார பகுதிகளில்தான் அதிக அளவு சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை பணிகள் முழு வீச்சில் தொடங்கும் என்று விவசாயிகள் கூறினர். இந்த அறுவடை பணிகள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும்.
கன்னிப்பூ சாகுபடி எப்போது?
ஜூன் மாதம் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அணைகள் மூடப்படுவது வழக்கம். இதனால் முதல் போகமான கன்னிப்பூ நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் மே மாதத்தில் இருந்து விவசாயிகள் ஈடுபட தொடங்குவார்கள்.