சமூகநீதி தமிழகத்தில்தான் இருக்கிறது: கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி


சமூகநீதி தமிழகத்தில்தான் இருக்கிறது: கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி
x

சமூகநீதி தமிழகத்தில்தான் இருக்கிறது என்று கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்து பேசினார்.

கடலூர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 85-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவன். நந்தனாரை பற்றி இங்குள்ள எல்லோருக்கும் தெரியும். நந்தனார் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தபோது அவரை உள்ளே அனுமதிக்காததால் கோவிலுக்கு வெளியே நின்றே சாமி கும்பிட்டார். அப்போது நந்தியே விலகி நின்று நந்தனாருக்கு தரிசனம் தந்ததாக கூறப்படுகிறது.

அன்றைக்கு நந்தனாரை என்ன செய்தார்கள் என்ற வரலாறு உண்டு. அந்த காலத்திலேயே சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், உரிமைக்காகவும் நந்தனார்தான் குரல் கொடுத்தார்.

தமிழ்நாட்டில் சமூக நீதி இல்லை என கவர்னர் கூறுகிறார். ஆனால் உண்மையான சமூகநீதி தமிழகத்தில்தான் இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சமூக நீதி, சமத்துவம், அனைவரையும் சமமாக கருத வேண்டும் என்பது உள்ளது.

பூணூல்

பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் காலத்திலும் சமூக நீதியை நிறைவேற்றி இருக்கிறார்கள். இன்றைக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்.

கவர்னர் பேசியது குறித்து அதிகமாக பேச விரும்பவில்லை. பூணூல் போட்டவர்கள் எல்லாம் புனிதர்களாக மாறிவிடுவார்களா?, புனிதத்திற்கும், பூணூலுக்கும் சம்பந்தமில்லை. எல்லோரும் சமம் என்று தான் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். அதை பின்பற்றிதான் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது.

சமூக நீதிக்காக முதல்-அமைச்சர் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த கொள்கை தற்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த சமத்துவ கொள்கையை, திராவிட மாடல் ஆட்சியை யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story