பாலதொழுவு ஊராட்சி குடிநீர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு
குடிநீர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு
பாலதொழுவு ஊராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை குறித்த அமைதி பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்சினை
சென்னிமலை அருகே பாலதொழுவு ஊராட்சி பகுதிக்கு 15 நாட்கள் தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி கடந்த 23-ந் தேதி அந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்து அங்கு வந்த அதிகாரிகளிடம் சிலர், பாலதொழுவு ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் மீது குற்றச்சாட்டுகளை கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், குடிநீர் பிரச்சினை குறித்து அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்திருந்தனர்.
அமைதி பேச்சுவார்த்தை
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆர்.சூர்யா, பெருந்துறை தாசில்தார் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிகாரிகள்
இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, குணசேகரன், ஒன்றியக்குழு துணை தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கவேல் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ கூறும்போது, 'பாலதொழுவு ஊராட்சி பகுதி மக்களுக்கு அடுத்த ஒரு ஆண்டுக்குள் பெரிய குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணப்படும். அதுவரை மாற்று ஏற்பாடுகள் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தெருவிளக்கு பிரச்சினைகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சரி செய்யப்படும்' என்றார்.
சுமுக முடிவு
அதேபோல் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆர்.சூர்யா, பெருந்துறை தாசில்தார் குமரேசன் ஆகியோர் பேசுகையில், 'குடிநீர் பிரச்சினைகள் விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஊராட்சி நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் பாதிக்கும் வகையில் சாலைமறியல் போன்ற போராட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்' என்று தெரிவித்தனர். இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டது.