மண்வள தின கருத்தரங்கம்
மண்வள தின கருத்தரங்கம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் தனியார் மண்டபத்தில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் வரவேற்று பேசினார். இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு கூட்டத்தினை மையத்தின் பெருந்தலைவர் நடன சபாபதி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் தலைமை உரையாற்றி பேசுகையில், இயற்கை வேளாண்மை தற்போது உலகத்திற்கும் மிக முக்கியமானதாக உள்ளது. எனவே விவசாயிகள் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. நமது அடுத்த சந்ததியினருக்கு மண் வளத்தை காத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இயற்கை வேளாண்மை கையேடு மற்றும் இயற்கை இடுபொருளான பஞ்சகாவ்யா, மண்வள அட்டை ஆகியவை கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் இயற்கை வேளாண்மை வல்லுனர்கள் ராதாகிருஷ்ணன், ரகுபதி ஆகியோர் இயற்கை இடுபொருள் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பற்றியும் மற்றும் இயற்கை முறையில் மண்ணை பாதுகாப்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் திருமலைவாசன், கவுதீஷ் மற்றும் அறிவுச்செல்வி ஆகியோர் மண்வளம் சார்ந்த பல்வேறு செய்முறை பயிற்சிகளையும், உயிரியல் முறையில் பூச்சி கட்டுப்பாடு பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். இந்த கருத்தரங்கத்தில் 410 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முடிவில் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா நன்றி தெரிவித்து பேசினார்.