சாத்தனூர் வலதுபுற கால்வாயில் மண் கொள்ளை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
சாத்தனூர் வலதுபுற கால்வாயில் மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் வழியாக வலது புற கால்வாய் செல்கிறது. பிரதான கால்வாய் முதல் அதன் பகுதிகளில் இருந்து தனித்தனியாக பிரிந்து கிளை கால்வாய்கள் செல்கிறது. அந்த வகையில் மூங்கில்துறைப்பட்டு அடுத்த இளையாங்கண்ணி கூட்டு சாலையில் இருந்து மணலூர், மேல் சிறுவள்ளூர், வடகீரனூர், வடபொன்பரப்பி, காப்பு காட்டு வழியாக பிரதான கால்வாய் செல்கிறது. கால்வாயில் இரு பகுதிகளிலும் அதிக அளவில் மண் கொட்டப்பட்டு கால்வாய்கள் சேதம் ஏற்படாதவாறு மரங்களும் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் இரவு நேரங்களில் அதிக அளவில் கால்வாய் ஓரத்தில் இருக்கக்கூடிய மண்ணை சமூக விரோதிகள் பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர். இந்த மண் கொள்ளையை தடுக்கக்கோரி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கோரிக்கை
நாளுக்கு நாள் அதிகளவில் மண் கொள்ளையடிக்கப்படுவதால், கால்வாய் ஓரங்கள் முழுவதும் வலுவிழுந்து காணப்படுகிறது. இதனால் கால்வாய் பாசன விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். எனவே மண் கொள்ளையை தடுப்பது மட்டுமல்லாமல், அதில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.