மண்வள பரிசோதனை


மண்வள பரிசோதனை
x

சிவகங்கை உள்ளிட்ட 8 வட்டாரங்களில் மண்வள பரிசோதனை நடக்கிறது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் இந்திய மண் மற்றும் நில பயன்பாட்டு ஆய்வு நிறுவனம் மூலம் மண் வளம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

8 வட்டாரங்களில்...

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மண் மற்றும் நில பயன்பாட்டு ஆய்வு நிறுவனம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை, காளையார்கோவில், கல்லல், மானாமதுரை, திருப்புவனம், தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை ஆகிய 8 வட்டாரங்களில் மண் வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது செயற்கைகோள் வரைபடங்கள் மூலம் பெறப்பட்ட விவரங்கள் அடிப்படையில் மண் மாதிரி எடுப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் 4 அடி நீளம், 2 அடி அகலம், 4 அடி ஆழம் அளவில் மண் மாதிரிக்கு தேவைப்படும் குழிகள் எடுக்கப்பட்டு, அதனில் உள்ள மண் தளத்தின் சிறப்பியல்பு, மண் தரம், விவசாய உபயோகத்திற்கான பயன்பாடு அளவு, பயிர்ஏற்புத்தன்மை, வட்டார வாரியான மண் வள வரைபடம் உருவாக்கப்படுகிறது.

வரைபடம் தயார்

மேலும் விவசாய நிலங்களில் 2.25 சதுர கிலோமீட்டர் அளவிற்கு அலகு வாரியாக மண்மாதிரிகள் 20-25 செ.மீ ஆழத்தில் வட்டாரத்திற்கு 100 முதல் 120 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதனிலுள்ள கார-அமில நிலை, கரிம கார்பன், மண்ணின் மின் கடத்து திறன், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, சல்பர், போரான், துத்தநாகம், தாமிரம், மாங்கனிசு போன்ற சத்துகளின் அளவுகள் கண்டறியப்பட்டு வட்டார வாரியாக மண் வளம் குறித்த வரைபடம் தயார் செய்யப்படுகிறது. மேலும், விரிவான மண் ஆய்வு அறிக்கை வெளியிடப்படுகிறது.

இதனை பயன்படுத்தி சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மண் வளத்திற்கு ஏற்ப நில சீர்திருத்தம் மேற்கொள்ளல் மற்றும் மண்வளத்திற்கு ஏற்ப பயிர்சாகுபடி செய்தல், மண் வள பாதுகாப்பு நீர்பிடிப்பு பகுதி அபிவிருத்தி குறித்த தகவல்கள் பெற்று அதனை பின்பற்றுவதன் மூலம் விவசாயிகள் பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story