சோலைமலை அழகர்பெருமாள் கோவில் பாலாலய பூஜை
பட்டிவீரன்பட்டி அருகே, சோலைமலை அழகர்பெருமாள் கோவிலில் பாலாலய பூஜை நடந்தது.
பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியில், சுமார் 500 ஆண்டுகள் பழமையான சோலைமலை அழகர் பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில், இந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று, கோவில் வளாகத்தில் பாலாலய பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டது.
இந்த பூஜையில், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் ராமதிலகம், ஆய்வாளர் பிரவீன்குமார், சேவுகம்பட்டி பேரூராட்சி தலைவர் வனிதா தங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
இந்த கோவிலில் புதிதாக 5 நிலை ராஜகோபுரம், மகாலட்சுமி சன்னதி, மூலவர் விமானம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 50 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பணிகள் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.