சோலைமலை முருகன் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது- பக்தர்கள் சாமி தரிசனம்
சோலைமலை முருகன் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில்
சோலைமலை முருகன் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
சோலைமலை முருகன் கோவில்
முருகப்பெருமானின் 6-வது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் நேற்று மாலை திருக்கார்த்திகையையொட்டி கோவில் வளாகம் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டது. முன்னதாக மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் வித்தக விநாயகர் வேல்சன்னதியிலும், சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதை தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் உற்சவர் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. அதை தொடர்ந்து மாலையில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் உற்சவர் சுவாமி புறப்பாடாகி சென்றார். ராஜகோபுரம் முன்பாக பனை ஓலைகளால் வேயப்பட்டிருந்த சொக்கப்பனை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூறி ஏற்றப்பட்டது. பின்னர் அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி சென்று இருப்பிடம் சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பாலதண்டாயுதபாணி கோவில்
குலசேகரன்கோட்டை தர்ம ராஜன் கோட்டை சிறுமலை அடி வாரத்தில் உள்ள கோம்பை பாலதண்டாயுத பாணி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது. இதையொட்டி பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறத்தில் மலை மீதுள்ள தீபகம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மதியம் 1 மணிக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.