விபத்துகளை தடுக்க சோலார் மின் விளக்கு அமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருத்துறைப்பூண்டி அருகே விபத்துகளை தடுக்கும் வகையில் சோலார் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி:
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருத்துறைப்பூண்டி அருகே விபத்துகளை தடுக்கும் வகையில் சோலார் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
புறவழிச்சாலை
நாகை-வேளாங்கண்ணி சாலையில் இருந்து திருத்துறைப்பூண்டி நகர பகுதிக்குள் வராமல் திருவாரூர் செல்லும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் திருவாரூர் சாலையில் திரும்பும்போது விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே அங்கு புறவழிச்சாலை தொடங்கும் இடத்தில் வேகத்தடை அமைத்து சோலார் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
சோலார் மின் விளக்கு
அதன்படி புறவழிச்சாலையையொட்டி வாகனங்கள் பிரிந்து செல்லும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தினர். மேலும் அங்கு சோலார் தானியங்கி மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.