சூரியஒளி மின்சாரம் உற்பத்தி தன்னிறைவு திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்: கனிமொழி எம்.பி. தலைமையில் நடந்தது


சூரியஒளி மின்சாரம் உற்பத்தி தன்னிறைவு திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்:  கனிமொழி எம்.பி. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:16:42+05:30)

தூத்துக்குடியில் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி தன்னிறைவு திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் புதன்கிழமை கனிமொழி எம்.பி. தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி

விளாத்திகுளம், புதூர் யூனியனில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெறும் திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் நேற்று நடந்தது.

ஒருங்கிணைப்பு கூட்டம்

எச்.சி.எல். நிறுவனத்தின் சமுதாய பங்களிப்பு திட்டத்தின் மூலம் விளாத்திகுளம், புதூர் யூனியன் பகுதிகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்த அனைத்து துறை அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று காலையில் நடந்தது. கூட்டத்துக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசும் போது, விளாத்திகுளம், புதூர் யூனியனில் எச்.சி.எல். நிறுவனத்தின் சமுதாய திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அரசு எல்லா மக்களுக்கும் விரிவான அளவில் திட்டங்களை செயல்படுத்தும். ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களை சந்தித்து அவர்களின் தேவையை அறியும் வாய்ப்பு அரசுக்கு கிடைப்பதில்லை. ஆனால் மக்களுக்கு தேவையான அரசின் திட்டங்களை எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு தெரியும். மக்களுக்கு தேவையானவற்றை செய்வதற்கு ஆர்வம் இருந்தாலும் சிலநேரங்களில் அவற்றை எவ்வாறு செய்வது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அதற்கு உதவக்கூடிய வகையில் இந்த சமுதாய திட்டம் இருக்கும்.

முன்னுதாரணமாக..

நமது கிராமத்திற்கு என்ன தேவை என்பதை தெரிந்து கொண்டு அதை நிறைவேற்றி தன்னிறைவு கிராமமாக மாற்றுவது தான் சமுதாய திட்டம். இந்த திட்டத்தை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்று கூறினார்.

அமைச்சர் கீதாஜீவன்

கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, பஞ்சாயத்து தலைவர்கள் திட்டமிட்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றவேண்டும். கிராமங்களிலும் மழைநீர் தேங்காதவாறு வடிகால்கள் அமைப்பது, சாலைவசதி உள்ளிட்ட பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். நீர் நிலைகளுக்குவரும் வரத்து கால்வாய்கள் மற்றும் குளங்கள் தூர்வாரப்பட வேண்டும், என்றார்.

கலந்து ெகாண்டவர்கள்

கூட்டத்தில் முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், யூனியன் தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story