நெல்லையில் சூரியஒளி மின்உற்பத்தி நிலையம்; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்


நெல்லையில் சூரியஒளி மின்உற்பத்தி நிலையம்; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்
x

மின் கட்டண சுமையை குறைக்க நெல்லையில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சரவணன் கூறினார்.

திருநெல்வேலி

மின் கட்டண சுமையை குறைக்க நெல்லையில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சரவணன் கூறினார்.

மாநகராட்சி கூட்டம்

நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், கதிஜா இக்லாம் பாசிலா, மகேசுவரி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

மின்உற்பத்தி நிலையம்

கூட்டம் தொடங்கியதும், மேயர், ஆணையாளர் பேசுகையில், ''நெல்லை மாநகராட்சியில் ஆண்டுக்கு மின்கட்டணமாக ரூ.14 கோடி செலுத்த வேண்டி உள்ளது. இதனால் மாநகராட்சிக்கு அதிக நிதி சுமை ஏற்படுகிறது. இதில் ரூ.4 கோடி வரை மிச்சப்படுத்தும் வகையில் நெல்லை ரெட்டியார்பட்டியில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். அதன் மூலம் 5 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். வருகிற மார்ச் மாதத்துக்குள் மாநகராட்சிக்கு ரூ.150 கோடி வரி வசூல் செய்யப்பட வேண்டும். ஆனால் இதுவரை ரூ.54 கோடி மட்டுமே வரி வசூல் ஆகிஉள்ளது'' என்றனர்.

குடிநீர் பிரச்சினை

இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கான கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

11-வது வார்டு கந்தன்:-வண்ணார்பேட்டையில் பழுதடைந்த மாநகராட்சி பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால் வகுப்பறைகள் இல்லாமல் மாணவ-மாணவிகள் சிரமப்படுகிறார்கள். அதனை உடனே கட்டித்தர வேண்டும்.

36-வது வார்டு சின்னத்தாய்:- மாநகராட்சி கூட்டம் திருக்குறள் படித்து தொடங்கப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்க வேண்டும். இந்திரா நகர், காமராஜர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. அதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.

14-வது வார்டு கீதா:- ஊருடையார்புரம் -தச்சநல்லூர் சாலையை சீரமைக்க வேண்டும். அதற்கு முன்னதாக மழை நீர், வயல்களில் இருந்து வரும் தண்ணீர் எளிதாக ரோட்டை கடந்து செல்லும் வகையில் ஓடை அமைக்க வேண்டும்.

3-வது வார்டு சுப்பிரமணியன்:- முறைகேட்டில் ஈடுபடும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2-வது வார்டு முத்துலட்சுமி:- தச்சநல்லூர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6-வது வார்டு பவுல்ராஜ்:- நெல்லை டவுனில் உள்ள நூறாண்டு பழமையான மாநகராட்சி நுழைவுவாயிலை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து அலங்கார விளக்குகள் அமைப்பது போல, பாளையங்கோட்டை ஏஞ்சல் மருத்துவமனை அருகில் புராதன சின்னமாக விளங்கும் மணிக்கூண்டை ஒவ்வொரு ஆண்டும் சீர்படுத்தி புதுப்பித்து டிஜிட்டல் கெடிகாரம், அலங்கார ஒளிவிளக்குகள் அமைத்து பேணி பாதுகாக்க வேண்டும். குடியிருப்புகளில் மழைநீர், பாதாள சாக்கடை கழிவுநீர் செல்லாமல் இருக்க மணிக்கூண்டு சாலையில் பாதாள சாக்கடை மூடி உயரத்துக்கு சாலையை உயர்த்தாமல் புதிய சாலை அமைக்க வேண்டும்.

காலி குடத்துடன் வந்த கவுன்சிலர்

காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா காலி குடத்துடன் கூட்டத்திற்கு வந்தார். அவர் தனது வார்டுக்கு உட்பட்ட புதுப்பேட்டை தெரு, பாளையங்கோட்டை பஸ் நிலைய பகுதிகளில் 5 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் சாக்கடை ஓடை தூர்வாருதல், ரோடு சீரமைப்பு போன்ற அடிப்படை வசதிகள் மோசமான நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.

இதே போல் கவுன்சிலர்கள் ரசூல் மைதீன், ரம்ஜான் அலி உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்களது வார்டுகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.


Next Story