ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி


ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் கர்நாடக அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலியானார்கள். பஸ்சில் வந்த 50 பயணிகள் உயிர் தப்பினர்.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி

கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் கர்நாடக அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலியானார்கள். பஸ்சில் வந்த 50 பயணிகள் உயிர் தப்பினர்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக அரசு பஸ்

கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்று பெங்களூருவில் இருந்து நேற்று காலை திருவண்ணாமலைக்கு புறப்பட்டது. அந்த பஸ் ஓசூர் பஸ் நிலையம் வந்து, பயணிகளை ஏற்றிக் கொண்டு, 50 பயணிகளுடன், கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டு இருந்தது.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி அருகில் சிக்காரி மேடு என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டு இருந்தது. இதனிடையே கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒட்டூரை சேர்ந்த ராணுவ வீரர் சுந்தரேசன் (வயது 38), இவரது நண்பர் கணேசன் (35) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சிக்காரிமேடு அருகில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றனர்.

2 பேர் பலி

அப்போது கண்இமைக்கும் நேரத்தில் கர்நாடக அரசு பஸ் மோட்டார்சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ராணுவவீரர் சுந்தரேசன், கணேசன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மோதிய வேகத்தில் மோட்டார்சைக்கிள் பஸ்சின் அடியில் சிக்கிக் கொண்டது. அப்போது மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்க், பஸ்சில் உரசியதில் பஸ் தீப்பிடித்தது.

இதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். உடனடியாக டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் பஸ்சில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளையும், முன்புற மற்றும் பின்புற கண்ணாடிகளையும் உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பினர். அதற்குள் பஸ்சில் பிடித்த தீ மளமளவென்று எரிந்தது.

50 பயணிகள் உயிர் தப்பினர்

இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கும், கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து பலியான 2 பேரின் உடல்களை குருபரப்பள்ளி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்து நடந்த இடத்தின் அருகில் யாரையும் விடாமல் போலீசார் அடைப்புகளை ஏற்படுத்தி தடுத்தனர்.

தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பஸ்சில் பிடித்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ் முழுமையாக எரிந்து எலும்புகூடாகி உருக்குலைந்து விட்டது. இந்த விபத்தால் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் விபத்தில் எரிந்து போன பஸ் மற்றும் மோட்டார்சைக்கிளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். பஸ்சில் பயணம் செய்த 50 பயணிகளும் பஸ் எரியும் முன்பாக கீழே இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

விடுமுறையில் ஊருக்கு வந்தவர்

விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பலியான ராணுவ வீரர் சுந்தரேசன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த நண்பர் கணேசனுடன் மோட்டார்சைக்கிளில் வெளியே சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் ராணுவவீரர் உள்பட 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியது.


Next Story