ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்


ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்
x
தினத்தந்தி 20 Aug 2023 10:25 AM IST (Updated: 20 Aug 2023 11:05 AM IST)
t-max-icont-min-icon

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை,

தெற்கு லடாக்கின் நியோமா அருகே உள்ள கெரே பகுதியில் சென்ற ஒரு வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள ஆழமான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த வாகனத்தில் 10 வீரர்கள் இருந்தனர். பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் வாகனம் அப்பளம் போல நொறுங்கியது. அதில் இருந்த வீரர்கள் அனைவரும் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன. காயம் அடைந்த வீரர்களை மீட்டு ராணுவ ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 9 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த வீரர்களின் விவரம் உடனடியாக தெரியவில்லை. அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. வாகன விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "லடாக்கில் துரதிருஷ்டவசமான சாலை விபத்தில் நமது துணிச்சல்மிகு ராணுவத்தினர் வீரமரணம் அடைந்ததை அறிந்து மிக வேதனை அடைந்தேன். துயர்மிகு இந்நேரத்தில் என் எண்ணங்கள் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுடன் உள்ளன. சம்பவத்தில் காயமடைந்த வீரர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story