குளச்சல் கடற்கரை போர் வெற்றி தூணில் ராணுவ வீரர்கள் வீர வணக்கம்
டச்சு படையை வென்ற 281-வது ஆண்டு தினத்தையொட்டி குளச்சல் கடற்கரையில் உள்ள போர் வெற்றி தூணில் ராணுவ வீரர்கள் வீர வணக்கம் செலுத்தினர்.
குளச்சல்,
டச்சு படையை வென்ற 281-வது ஆண்டு தினத்தையொட்டி குளச்சல் கடற்கரையில் உள்ள போர் வெற்றி தூணில் ராணுவ வீரர்கள் வீர வணக்கம் செலுத்தினர்.
குளச்சல் போர்
குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த போது குளச்சல் துறைமுகம் சிறந்த வர்த்தகத்தின் முக்கிய இடமாக விளங்கியது. இதனை அறிந்த டச்சு படையினர் குளச்சல் துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கில் குளச்சல் கடல் பகுதியில் முகாமிட்டனர்.
உடனே திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா வேணாட்டின் தலைநகரமான கல்குளம் (இன்றைய பத்மாநாபபுரம்) வந்தார். பின்னர் படை தளபதிகளுடன் குளச்சல் கடற்கரைக்கு புறப்பட்டார். அங்கு திருவிதாங்கூர் படையினருக்கும், டச்சு படையினருக்கும் கடுமையான சண்டை நடந்தது. 2 மாதங்களாக நடந்த இந்த போர் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி முடிவுக்கு வந்தது. அதாவது டச்சு படையை திருவிதாங்கூர் படை வென்று சாதித்தது.
வெற்றி தூண்
அந்த போரின் போது கடற்கரையில் மாட்டு வண்டியில் பனை மரங்களை சாய்த்து பெரிய பீரங்கி போன்று மன்னர் மார்த்தாண்ட வர்மா தந்திரம் செய்து டச்சு படையினரை சரணடைய செய்ய வைத்ததாக செவி வழி கதைகள் கூறுகிறது.
இதற்கு குளச்சல் மீனவர்கள் மன்னருக்கு பெரும் உதவிகள் செய்தனர். இந்த போர் வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் குளச்சல் கடற்கரையில் போர் வெற்றித்தூண் ஒன்றை நிறுவினார்.
வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
இந்த வெற்றித்தூணில் மெட்ராஸ் படைப்பிரிவு (திருவனந்தபுரம் பாங்கோடு) சார்பில் கடந்த சில வருடங்களாக ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த போர் வெற்றியடைந்த நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) 281-வது ஆண்டு நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி நேற்று மெட்ராஸ் 11-வது படைப்பிரிவு சார்பில் வெற்றி தூணில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
திருவனந்தபுரம் பாங்கோடு கமாண்டர் பிரிகேடியர் லலித் சர்மா, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தேவவரம், வருவாய் அதிகாரி சிவப்பிரியா, முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை உதவி இயக்குனர் சீனிவாசன், குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன், நகராட்சி ஆணையர் ஜீவா, குளச்சல் பங்குத்தந்தை டைனீசியஸ் ஆகியோர் வெற்றித்தூணுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இதில் கல்குளம் தாசில்தார் வினோத், குளச்சல் மறை வட்ட முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.செய்ல்ஸ், குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, விசைப்படகு சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், கவுன்சிலர்கள் ஷீலா ஜெயந்தி, ஜாண்சன், சந்திரயோலா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.