ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்
ராணுவவீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஓய்வு பெற்ற ராணுவவீரர்கள் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பாதுகாப்பு வேண்டி
வேலூர் மாவட்ட முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்கம் சார்ப்பில் பொருளாளர் ஜம்புலிங்கம், செயலாளர் ஜெகதீசன், ஆலோசகர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ராணுவவீரர்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.அவர்கள் அளித்த மனுவில், தமிழகத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து தாக்குதல், கொலை, அவதூறு பேச்சுகள் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழகத்தில் அதிகமான ராணுவவீரர்கள் கொண்ட வேலூர் மாவட்டத்தில் இதுபோன்ற எந்த செயலும் நடக்காத வகையில் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவவீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ராணுவவீரர் பிரபு கொலை செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று பல இடங்களில் வன்முறை தாக்குதல்கள் நடக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாக கொண்டு கருப்பு பேட்ஜ் அணிந்து மனு அளித்துள்ளோம் என்றனர்.
கூலி உயர்த்த வேண்டும்
குடியாத்தம் நகரை சேர்ந்த பா.ம.க. நகர செயலாளர்கள் குமார், ரமேஷ் மற்றும் பா.ம.க.வினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
குடியாத்தம் நகரம் கோபாலபுரம் நேதாஜிசவுக் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது. அதில் ஒருமுறை கடை இடமாற்றம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் கடையால் மக்களுக்கு இடையூறு இல்லை என்றும் மாறுபட்ட தகவலை அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே எங்கள் மனுவின் உண்மை தன்மையினை ஆராய வேண்டும். கடை முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
இதேபோல, குடியாத்தம் நகரில் சுமார் 5 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் தனியார் மண்டி மூலம் கைத்தறி லுங்கிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பி ஏராளமான நெசவாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
தற்போது தொழிலாளர்களுக்கு 8 லுங்கிகள் தயார் செய்து கொடுத்தால் ரூ.1,500 கூலி கொடுக்கின்றனர். இதை ரூ.1950-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.